இந்தியாவின் முடிவால் ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் - யுனிகார்ன் நிறுவனம் கணிப்பு

லடாக் எல்லையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதல் காரணமாக எல்லையில் போர் மூளும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த மோதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சீன பொருட்களுக்கு தடைவிதிக்கக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டமா நடத்தினர். மேலும் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதில் ‘யுனிகார்ன் பைட்டான்ஸ் லிமிடெட்’ நடத்தும் டிக் டாக், ஹலோ, விகோ வீடியோ ஆகிய 3 செயலிகளும் அடங்கும். சீன தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக ‘யுனிகார்ன் பைட்டான்ஸ் லிமிடெட்' விளங்குகிறது.

தற்போது இந்தியாவின் இந்த தடை உத்தரவால் தங்களுக்கு 6 பில்லியன் டாலர் (ரூ.45 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என யுனிகார்ன் நிறுவனம் கணித்துள்ளது. இந்த இழப்பு மற்ற 56 செயலிகளுக்கு ஏற்படும் மொத்த இழப்பை விட அதிகம் ஆகும்.