காவிரியில் 3 ஆயிரம் கனஅடி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

புதுடில்லி: 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கணும்... தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

காணொளி வாயிலாக நடைபெற்ற அக்குழுவின் கூட்டத்தில், தங்கள் மாநிலத்தின் முக்கிய அணைகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளதாகவும், அதனால் தமிழகத்திற்கு நீர் திறந்து விட முடியாத சூழல் உள்ளதாகவும் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் தேவை கருதி வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் அதாவது 20.75 டி.எம்.சி நீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த ஒழுங்காற்று குழு, வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை 3 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்தது.