சாத்தான்குளம் வழக்கில் காவலர்கள் 3 பேரை காவலில் எடுத்தது சிபிஐ

மதுரை: சாத்தான்குளம் வழக்கில் காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து ஆகியோரை விசாரிக்க சிபிஐ காவலில் எடுத்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் கடுமையாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், இந்த கொலைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் போலீசாரை கைது செய்து, தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக 10 போலீசாரை கைது செய்துள்ள நிலையில், காவலர்கள் சாம துரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய மூவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து ஆகியோர் சிபிஐ காவலுக்கு செல்ல சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து , போலீசார் மூவரையும் 3 நாள் சிபிஐ காவலுக்கு அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை 3 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.