துணை முதல்வர் வீட்டில் சிபிஐ ரெய்டு... முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்

புதுடில்லி: சிபிஐ அதிகாரிகள் ரெய்டு... டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார் .

ஆம்ஆத்மி ஆட்சி நடக்கும் டில்லியில் சமீபத்தில் மதுபான ஆயத்தீர்வை தொடர்பான சில சட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் மது பான தயாரிப்பாளர்கள், மது பார் நடத்துதல், மது கடைகள் உரிமம் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் மணீஷ் சிசோடியா பலன் அடைந்துள்ளார் என்றும் புகார் கிளம்பியுள்ளது.

சிபிஐ விசாரிக்க கவர்னர் பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கலால் துறை அதிகாரிகள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் சிசோடியா வீடு மற்றும் துறை சார் சில அதிகாரிகள் வீடு, அலுவலகங்கள் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இந்த ரெய்டு மூலம் சிபிஐக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தியவர் மணீஷ் சிசோடியா.

ஆனால் அவர் நாட்டுக்கு நல்ல செய்வதால் அவர் குறி வைக்கப்படுகிறார். எங்கள் நாட்டு பணி தொடரும். யாரும் நிறுத்த முடியாது. சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.