நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது - ஜே.பி.நட்டா

தற்போது கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மேலு, கொரோனா காரணமாக சக்திவாய்ந்த வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் பிரதமர் மோடி உறுதியான முடிவு எடுத்து ஊரடங்கை அமல்படுத்தினார். அதன்பின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒடிசா மாநில பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த மோடி அரசு ஒரு புறம் சுகாதாரம் தொடர்பான திட்டங்களை மேற்கொண்டதோடு பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்சார்பு இந்தியா, விவசாயிகள் நல்வாழ்வு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை ஐ.நா. பொதுச் செயலாளரே பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஏற்பட்ட சவால்களையும், துயரங்களையும் மத்தியில் உள்ள பாஜக அரசு வாய்ப்புகளாக மாற்றி இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு பாஜக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் முடங்கிவிட்டன. பாஜக தான் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருவதாக ஜே.பி.நட்டா கூறினார்.

மேலும் அவர், கொரோனா பரவலுக்கு பிறகு இந்தியாவில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன் நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஒரு ஆஸ்பத்திரிகூட கிடையாது. ஆனால் இப்போது 2½ லட்சம் படுக்கைகளுடன் 1,500 ஆஸ்பத்திரிகள் உள்ளன. ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார்.