தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26°C ஆகவும் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.