தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: இலங்கை மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

அந்த வகையில், இன்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும், இந்த கனமழை வரும் நவம்பர் 7ஆம் தேதி வரைக்கும் நீடிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


ஆனால், தொடர்ந்து கனமழை பெய்து வந்தாலும் மதுரை, தூத்துக்குடி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலை காட்டிலும் 4 டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்துள்ளனர். சென்னையை பொருத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடலோரப் பகுதிகளில் புயல் சின்னம் எதுவும் உருவாகாத நிலையில் மீனவர்கள் வழக்கம் போன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.