சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பகலில் வெயில் அதிகமாக இருக்கும்

சென்னை: தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல் வருகிற 11ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதேபோன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும், தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் எனவும் குறிப்பிட்டு உள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும்சென்னை மண்டல வானிலை மையம் கூறியிருந்தது. அதற்கேற்ப சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பகலில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும், மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.