ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று முடிவு எடுக்கப்பட வாய்ப்பு; மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை

கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.34 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு 1.72 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. வரும் 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடையுள்ள நிலையில் அதை நீட்டிக்க தேவை உள்ளதா? என்பது குறித்து ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.