நிவர் புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவிப்பு வெளியிட்டார் புதுவை முதலவர் நாராயணசாமி

நிவர் புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக மாநில பேரிடர் அவசரகால மையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்து அரசுதுறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:- நிவர் புயல் சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு புதுவையில் ஒவ்வொரு துறைகளிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மின்கம்பம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யவும், மரங்களில் உள்ள கிளைகளை அகற்றவும், மரங்கள் கீழே விழாமல் பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.

தடையில்லாமல் குடிநீர் வழங்கவும், மின்சாரம் தடைபட்டால் 12 மணி நேரத்தில் வழங்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். 99 சதவீத மீனவர்கள் புதுவைக்கு திரும்பி வந்துவிட்டனர். புதுவையில் மீன் பிடிக்க சென்ற ஒரு படகு மீனவர்கள் மட்டும் கரை திரும்பவில்லை.

கடலோர காவல்படை மூலம் காரைக்காலில் 90 படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் காலக்கெடு இருக்கிறது. மீனவர்களின் படகு மற்றும் வலைகளை பத்திரமாக வைக்க உத்தரவிட்டுள்ளோம்.

தேவையான மருந்துகள் இருப்பு வைக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருமணம் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்து போதுமான உணவு வழங்கப்படும். தாழ்வான பகுதிகளில் என்ஜின் மோட்டார் மூலம் நீரை அகற்றவும் தயாராக ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

வியாபார நிறுவனங்களை இன்று மாலை முதல் நாளை வரை மூட உத்தரவிட்டுள்ளோம். தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று தொழிற்சாலைகளுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். வியாபார நிறுவனங்களை மூட வலியுறுத்தியுள்ளோம்.

உயிர் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயலை எதிர் கொள்ள அனைத்து துறைகளும் 24மணி நேரமும் செயல்பட்டு தயார் நிலையில் உள்ளது. புதுவையில் நானும், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி ஆகியோரும் காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணனும் களப்பணியில் ஈடுபடுவோம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.