முதல்-அமைச்சர் வருகிற 29-ந்தேதி தூத்துக்குடி வருகை

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ந்தேதி தூத்துக்குடி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தந்து, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், வரலாற்று சிறப்புமிக்க எண்ணற்ற புதிய திட்டங்களையும் அறிவிக்கிறார்.

மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.37 கோடி செலவில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட ஏரல் தாலுகாவுக்கு புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. மேலும் பல்வேறு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக கவர்னரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். இதுதொடர்பாக விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.