திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை காலை முதலமைச்சர் வருகை

கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் நாளை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவர் காலை 9.30 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெறும் ஆய்வு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்துகிறார்.

பின்னர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் தனித்தனியாக கலந்தாய்வு கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் 3கூடுதல் போலீஸ்சூப்பிரண்டுகள், 17 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த 4 யூனிட் போலீசார் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட போலீசார் என மொத்தம் 2,165 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.