மாநகர பேருந்துகளில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் ... போக்குவரத்துதுறை உத்தரவு

தமிழகம்: தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன்மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது

அதே நேரம் கட்டணம் இன்றி பயணிகள் அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தையும் சந்தித்தது. சென்னையில் மட்டும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 28 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இந்த நிலையில் இலவச பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே பேருந்து நிற்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இலவச பேருந்துகளில் நடத்துனர்கள் பயணிகளிடம் தரம் குறைவாக பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஒருசில பஸ் டிரைவர்கள் பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்தாமல் சற்று தூரம் தள்ளி நிறுத்துவதாகவும் கூறப்பட்டது.

இதனால் பெண்கள், வயதானவர்கள் ஓடிச்சென்று ஏறுவதில் பெரும் சிரமப்படுகின்றனர்.இது தொடர்பாக கிளை மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் பொதுமக்களிடம் இருந்து புகார் வராத வகையில் செயல்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கிளை மேலாளர்கள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இலவசம் என்பதால் பெண்களை அவமதிக்க கூடாது, அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.