சூரப்பா மீதான புகார்... விசாரணைக்கு உதவியாக அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனை உயர்கல்வித்துறை நியமித்து அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையின்படி, பணியை தொடங்க உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், விசாரணைக்கு உதவிக்காக அதிகாரிகள், பணியாளர்கள் கேட்டு உயர்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அவர் கேட்டுக் கொண்டதின்படி, சூரப்பா மீதான புகார் குறித்த விசாரணைக்கு உதவியாக அதிகாரிகள், பணியாளர்களை நியமித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா அரசாணை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனுக்கு உதவியாக உயர்கல்வித்துறை இணை செயலாளர் எம்.எஸ்.சங்கீதா (முழு கூடுதல் பொறுப்பு), லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.பொன்னி(முழு கூடுதல் பொறுப்பு), சென்னை ஐகோர்ட்டின் சிறப்பு அரசு பிலீடர் எம்.கார்த்திக்கேயன் (முழு கூடுதல் பொறுப்பு), எஸ்.சாய்பிரசாத் (வக்கீல்), கே.முத்து (ஓய்வு பெற்ற அரசின் கூடுதல் செயலாளர்) ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர்.

இதுதவிர 3 தனிச்செயலாளர்கள், 3 தட்டச்சர்கள், 4 போலீசார், ஒரு கோர்ட்டு அலுவலர், 4 உதவியாளர்கள், ஒரு பதிவு கிளர்க், 4 அலுவலக உதவியாளர்கள், 2 துப்புரவாளர்கள் ஆகிய பணியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.