அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

புதுடில்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை மோடி அரசின், அரசியல் துன்புறுத்தல், பழிவாங்கல் நடவடிக்கை அன்றி வேறு அல்ல. எதிர்க்கட்சிகளில் இருக்கும் யாரும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.