காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்... தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 71. கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மல்லிகார்ஜூன கார்கே எம்பி, முன்னாள் மந்திரி ஜிதின் பிரசாதா, கனிமொழி எம்பி, அபிஷேக் சிங்வி, மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அகமது படேலின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும் என்று கூறி உள்ளார்.

சோனியா காந்தி கூறுகையில், தனது முழு வாழ்க்கையையும் காங்கிரசுக்கு அர்ப்பணித்த அகமது படேலை இழந்துவிட்டேன். ஈடுசெய்ய முடியாத நண்பர், விசுவாசமுள்ள தொண்டரை இழந்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.

அகமது படேல் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்து என ராகுல் காந்தி புகழஞ்சலி செலுத்தி உள்ளார். அகமது படேல் மறைவால் காங்கிரசில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.