காவலர்கள் சொந்த வாகனங்களில் ‘போலீஸ்’ ஸ்டிக்கரை அகற்ற வேண்டும்- டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..

தமிழ்நாடு: தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். 2011ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2012 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது.

அதில் கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களின் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.

அதில், காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும், போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து காவல்துறை ஆணையர்கள் அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை ஆணையர்கள் அனைத்து காவல் ஆணையர்கள், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்டு அல்லது ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்துமாறு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், உத்தரவை பின்பற்றியது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.