ஓபிஎஸ் இன்று ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, அதிமுக விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, ஓபிஎஸ் அணி பாஜகவுடன் கைகோர்க்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இச்சுழலில் இன்று மாலை பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் முடிவெடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தங்கள் அணியை ஏமாற்றிவிட்டதாக ஏற்கனவே பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். அதிமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சியை தாங்கி பிடித்து ஒத்துழைப்பு தந்தாக ஓபிஎஸ் எண்ணுவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. உலக அளவில் மோடியின் புகழ் உயர்ந்திருக்கும் நிலையில் தேசிய அளவில் அவரை தவிர நல்ல பிரதமர் சாய்ஸ் இல்லை என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் எக்காரணமும் இல்லாமல் பாஜகவை இபிஎஸ் தூக்கி எரிந்து விட்டதாகவும் ஓபிஎஸ் கருத்து சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக வேண்டாம் என்றும் சொல்லும் வரை அவர்களுடன் பயணம் தொடரும் என்று ஓபிஎஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதிமுகவின் பெரும்பான்மை நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் இருக்கும் நிலையில், டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ்-யுடன் பயணிக்க போவதாக தினகரனும் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த சுழலில் இபிஎஸ் அணி விலகியதை அடுத்து, பாஜகவுடன் ஓபிஎஸ் கைகோர்ப்பாரா என்று கேள்வி ஒன்று எழுந்துள்ளது. அதிமுக தரப்பு இனி பாஜக பக்கம் போக வேண்டாம் என்பதில் உறுதி காட்டுகிறது. எனவே, பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு இடையே, பாஜகவின் அடுத்தம் திட்டம் பற்றி ஆலோசிக்க விரைவில் டெல்லி செல்ல உள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. தமிழக நிலவரம் குறித்த முதற்கட்ட அறிக்கையை பாஜக தேசிய தலைமையிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளிக்கவுள்ளார். மேலும் இது தொடர்பான முடிவு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.