இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்தம் 26,47,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 941 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,921 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 19,19,843 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,76,900 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 7,31,697 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,00,41,400 ஆக அதிகரித்துள்ளது.