சென்னை போலீசில் உதவி கமிஷனர் உள்பட 17 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு ஒழுங்கு நடவடிக்கைகளில் முன் வரிசையில் நின்று பணியாற்றி வரும் காவல் துறையினரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை போலீசில் நேற்று ஒரு உதவி கமிஷனர் உள்பட 17 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,979 ஆக உயர்ந்தது. தற்போது பாதிக்கப்பட்ட உதவி கமிஷனர் ஏற்கனவே கொரோனா பாதிப்பில் சிக்கி மீண்டு வந்தவர்.

சுதந்திர தின பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டி இருந்ததால், அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் இருப்பது கண்டறியப்பட்டு, உடனடியாக கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் முகாமில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அதே நேரத்தில், புளியந்தோப்பு உதவி கமிஷனர் ஜெயசிங் உள்பட நேற்று 10 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். குணம் அடைந்து பணிக்கு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்தது.