சென்னை போலீசில் உதவி கமிஷனர் உள்பட 22 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை போலீசில் ஏற்கனவே 2,090 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று புதிதாக உதவி கமிஷனர் உள்பட 22 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 19 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் முன்வரிசையில் நின்று பணியாற்றி வருகிறவர்கள் காவல் துறையினரே. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் பணியாற்றி வரும் காவல் துறையினர் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னை போலீசில் ஏற்கனவே 2,090 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று புதிதாக சென்னை போலீசில் ஒரு உதவி கமிஷனர் உள்பட 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,112 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில் நேற்று 17 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதன் மூலம் குணம் அடைந்து பணிக்கு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,712 ஆக உயர்ந்துள்ளது.