கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை; அனல்மின் நிலைய ஊழியர்கள் அச்சம்

வடசென்னை, அனல்மின் நிலையத்தில் கொரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்று ஊழியர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தனது பெயர் கூற விரும்பாத வடசென்னை அனல் மின் நிலையம் - 1 ல் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்ததாவது:

வடசென்னை அனல்மின் நிலையம் - 1 வது அலகில் மட்டும் இதுவரை 15 - க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை மொத்தமாக மறைத்துவிட்டார்கள். அனல் மின் நிலையத்திலிருந்து வேலூருக்குச் சென்ற ஒருவர் சிக்கிக்கொண்டதால் அவர் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். மற்ற எண்ணிக்கைகள் அனைத்தும் நிர்வாகத்தால் மறைக்கப்பட்டு விட்டன.

உள்ளே எந்தவித கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அனல் மின் நிலையத்துக்குள் ஊழியர்கள் நுழையும் போது கிருமி நாசினி கொடுக்கப்படுவது இல்லை, உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்படுவதில்லை. கொரோனாவைத் தடுக்க வேண்டும் என்று எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் நிர்வாகத் தரப்பில் இதுவரை எடுக்கவில்லை.

முறையான சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது இல்லை. வேலைக்குச் செல்லவே பயமாக இருக்கிறது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு செல்லவேண்டி இருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

தமிழகத்தில் உள்ள முக்கியமான அனல்மின் நிலையம் வடசென்னை அனல்மின் நிலையம் ஆகும். இங்கு 1830 மெகா வாட் அளவிலான மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டையடுத்து, தலைமைப் பொறியாளரின் உதவியாளரான இளநிலைப் பொறியாளர் தியாகமூர்த்தி கூறியதாபவது:

கொரோனா வந்துவிட்டால் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது அரசின் உத்தரவு. அதை எப்படி மீற முடியும்? முடிந்தவர்களை மட்டுமே பணிக்கு வரச் சொல்கிறோம்.

முடியவில்லை என்றால் விடுமுறை எடுத்துக்கொள்ளச் சொல்கிறோம். தும்மல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தாலே விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கச் சொல்கிறோம். நோய்த் தொற்றை ஒழிக்க வேண்டும் என்று அரசு முயற்சி எடுக்கும் போது நாங்கள் எப்படி அந்த முயற்சிக்குக் குறுக்கே நிற்போம். நோய் தாக்கினால் எங்களையும் தானே தாக்கும். ஒரு யூனிட்டில் உதவி செயற்பொறியாளர் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது.

உடனே அந்த யூனிட்டையே ஷட் டவுன் செய்துவிட்டு அதற்குப் பதில் இப்போது மேட்டூரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். உயிர் விஷயத்தில் எப்படிச் விளையாட முடியும்? வடசென்னை அனல் மின் நிலையம் குறித்துப் பரவும் தகவல் அனைத்தும் வதந்தி. அதில் துளியளவும் உண்மை இல்லை என்றார்.