ஆஸ்திரேலியாவில் போராட்டத்தில் கலந்துகொண்ட 8 பேருக்கு கொரோனா

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவர் போலீஸார் பிடியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அமெரிக்காவில் இனவாதத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்திற்கு உலக நாடுகள் பல ஆதரவு தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவிலும் இம்மாதிரியான போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடந்த இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விக்டோரியா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

போராட்டத்தில் கலந்துகொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு கூறினார்கள்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மொத்தம் 7,274 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,744 பேர் குணமடைந்தனர். சிகிச்சை பலனின்றி 102 பேர் பலியாகினர்.