திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 830 ஆக உயர்வு

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 815 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,315 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 83,377 ஆக உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 815 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பேரளம் அருகே அன்னதானபுரம் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வலங்கைமான் பகுதியை சேர்ந்த கணவன்-மனைவி உள்பட 3 பேர், மன்னார்குடி பகுதியை சேர்ந்த 2 பேர், கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவர் உள்பட 15 பேருக்கு நேற்று கொரோனா நோய் தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 830 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 277 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.