விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பலி...ஒரே நாளில் 4 பேர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதி தீவிர வேகத்தில் பரவி வருகிறது. அதுபோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,723 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 21 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த சூழலில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

விழுப்புரம் மகாராஜபுரம் மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்த 84 வயதுடைய மூதாட்டி கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதேபோல் திண்டிவனம் ரோஷணைபாட்டை பகுதியை சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டி கொரோனா உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதேபோல் செஞ்சி அருகே உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 46 வயதுடைய நபர், அரசு போக்குவரத்துக்கழக புதுச்சேரி பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12.15 மணியளவில் இறந்தார்.

மேலும் திண்டிவனம் அருகே கொள்ளார் கிராமத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 3.15 மணியளவில் இறந்தார். தொடர்ந்து, சுகாதாரத்துறை விதிமுறைப்படி அவர்கள் 4 பேரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21-ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 100 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,920-ஆக உயர்ந்துள்ளது.