திருமணம் முடிந்த 2 நாளில் பெண்ணுக்கு கொரோனா; 32 பேருக்கு தனிமை

திருமணம் நடந்த 2 நாளில் பெண்ணுக்கு கொரோனா... ம.பி.,யில் திருமணம் முடிந்த இரண்டு நாட்களே ஆன நிலையில், பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மாப்பிள்ளை உள்பட திருமணத்தில் பங்கேற்ற 32 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ம.பி மாநிலம் போபால் அடுத்த ஜாட் கேடி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், ரைசன் அடுத்த சத்லாப்பூர் கிராமத்தின் மண்டிதீப் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த திங்களன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

புதனன்று நடத்தப்பட கொரோனா பரிசோதனையில் மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மணமக்கள், திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் உட்பட 32 பேரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் முழுவதும் மணப்பெண்ணுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து அப்பெண் வழக்கமான காய்ச்சலுக்கான மருந்தை எடுத்து கொண்டுள்ளார். இதனால் காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளார். இருந்த போதும், அப்பெண்ணின் பெற்றோர், கொரோனா பரிசோதனைக்கு போபால் அழைத்து சென்றுள்ளனர்.

திருமணம் நடைபெற்ற இரண்டு நாட்களுக்கு பிறகு, அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ம.பி.,யில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 5,981 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ளனர். 2,843 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 2,868 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.