சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா; அறிகுறிகள் இல்லாமலேயே பரவுகிறது

பீஜிங்: சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, அந்த நாட்டு தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, முதன் முதலில் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில்தான் உருவானது. இதைத் தொடர்ந்து உடனடியாக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் சீனாவில் கொரோனா பரவும் வேகம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்களில், 15 பேருக்கு அறிகுறிகள் இல்லாமலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 82,881 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கடந்த 8 நாட்களாக இந்த வைரஸ் தொற்றால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. இதனால் கடந்த 27-ந் தேதி முதல் பலியானவர்கள் எண்ணிக்கை 4,633 ஆக நீடிக்கிறது.