பொலிவியாவின் இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரையும் விட்டுவைக்காமல் பரவி வருகிறது.

இந்நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், நேற்று மதிய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்துள்ளது.

பொலிவியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,500 ஆக இருந்தது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது, பொலிவியாவின் இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிபர் ஜூனைன் அனெசு தனது டுவிட்டர் பக்கத்தில், தான் நலமுடன் இருப்பதாகவும், தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு பணிகளை தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை மந்திரி, மத்திய வங்கியின் தலைவர் என இதற்கு அங்குள்ள தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.