இந்தியாவில் ஒரே நாளில் 5,611 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் தான் கட்டுக்குள் வைத்து ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இதற்கு நமது நாடும் விதி விலக்கல்ல.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் போன்ற பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5611 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்தம் 1,06,750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரே நாளில் 140 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3303 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42298 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3124 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 37136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1325 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 12140 பேருக்கும், தமிழகத்தில் 12448 பேருக்கும், டெல்லியில் 10554 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.