அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தாக்குதலுக்கு பொதுமக்கள் முதல் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் செல்லூர் ராஜூ. இவரது மனைவி ஜெயந்தி. மதுரையில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சரின் மனைவி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதியானது.