கொரோனா வைரஸ் இன்னும் உச்ச நிலையை தொடவில்லை - உலக சுகாதார நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த வார இறுதி நாட்களில் உலகளவில் 4 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. உலகமெங்கும் 1 கோடியே 11 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 5.35 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக பதிவானது. அதற்குள் தற்போது கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. ஆனாலும் நாம் இன்னும் அந்த தொற்று நோயின் உச்சத்தை தொடவில்லை. உலகளவில் இறப்பு சமப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. உண்மையிலேயே சில நாடுகளில் இறப்பு எண்ணிக்கையை குறைப்பதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கொரோனா வைரஸ் தொற்று மிகவும் ஆபத்தானது என்று இந்த தொற்றுநோயின் ஆரம்ப காலத்தில் இருந்து, நீண்ட காலமாக கூறி வருகிறோம். ஆரம்பத்தில் இருந்தே இதை நமது முதல் பொது எதிரி என்று கூறினோம்.கொரோனா வைரஸ் தொற்று மனித குலத்துக்கு எதிரி. இதில் மனிதகுலம் ஒற்றுமையாக நின்று போரிட்டு, தோற்கடிக்க வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவு தலைவர் டாக்டர் மைக்கேல் ரேயான் கூறுகையில், ஜூன் மாதத்தில் நாம் பார்த்தது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புதான். அத்துடன் இன்னும் வேகம் எடுக்காதது, உயிர்ப்பலிகள்தான். அதற்கு இன்னும் காலம் எடுக்கும். இதில் சில பின்னடைவுகள் இருக்கலாம். பலி எண்ணிக்கை உயரப்போவதை இனி நாம் காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.