இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவது சற்று ஆறுதலடைய செய்துள்ளது.

தற்போது, இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் இதுவரை 719665 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 22252 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 467 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20160 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 439948 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 15515 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடைய 259557 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 211987 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 114978 பேருக்கும், டெல்லியில் 100823 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.