ஊரடங்கு உத்தரவு தளர்வால் கிடுகிடுவென உயரும் கொரோனா வைரஸ்

கிடுகிடுவென்று உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு... உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க ஊரடங்கு உத்தரவை தளர்த்தி வருவதை அடுத்து, 'கொரோனா' வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் விறுவிறுவென உயர்ந்து வருகிறது.

இந்தியாவில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, தினமும் புதிதாக, 15 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து சில மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. பாகிஸ்தானில், பல மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடமில்லாமல் திருப்பி அனுப்புகின்றன.

மெக்சிகோ, கொலம்பியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும், பாதிப்பு, பெருகி வருகிறது. பிரேசில் நாட்டில், 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 11.51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில், 24.24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட சில நாடுகள் கூட, மீண்டும் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நேற்று புதிதாக, 17 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மெல்பர்ன் நகரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தென் கொரியாவிலும், புதிதாக, 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் பீஜிங் நகரில், இருநுாறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் கூறுகையில், ''மூன்று மாதங்களில், 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலை மாறி, தற்போது, எட்டு நாட்களில், 10 லட்சம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு, கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துள்ளது,'' என்றார்.