திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் - பொதுமக்கள் அச்சம்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் இருந்து வந்தது. இதன் பின்னர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பலரும் திருப்பூருக்கு வர தொடங்கினர். பின்னலாடை நிறுவனங்களும் செயல்பட தொடங்கின.

இந்த நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு திருப்பூரில் அதிகரித்து வருகிறது. வெளி ஊர்களில் இருந்து வருகிறவர்கள் மூலம் இந்த தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைய தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வசித்த பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

மேலும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக உயர்ந்துள்ளது.