சென்னையின் குடிசை பகுதி மக்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் மாநகராட்சி

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய, ஆதரவற்ற குடும்பங்களுக்கு சென்னை மாநகராட்சி சிறப்பு திட்டத்தை அறிவித்தது. குடிசை பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு எட்டு நாட்கள் இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் சென்னையில் 5.3 லட்சம் குடும்பங்களில் வசிக்கும் 26 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்தது. மாநகராட்சியின் சமுதாய கூடங்கள், அம்மா உணவகங்கள், பெரிய சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்படுகிறது. கடந்த 6-ந் தேதி முதல் குடிசை பகுதி மக்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 48 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று மாலையில் 6.8 லட்சம் பேருக்கு இரவு உணவு வினியோகிக்கப்பட்டது. ஏழைகள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சென்னையில் உள்ள குடிசை பகுதிகள் மற்றும் ஏழைகள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வினியோகிக்கப்படுகிறது. இந்த பணியில் மாநகராட்சி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மூன்று வேளையும் விதவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. சுவையாக, தரமாக தயாரிக்கப்பட்டு பாதுகாப்புடன் ஒவ்வொரு பகுதியிலும் வினியோகிக்கப்படுகிறது. காலை உணவாக இட்லி, பொங்கல், கிச்சடி, சாம்பார் வழங்கப்படுகிறது. மதியம் பிரிஞ்சி, லெமன் சாதம், தக்களி சாதம், கறிவேப்பிலை சாதம் போன்றவையும் இரவில் சப்பாத்தி, சாம்பார் சாதம், உப்புமா போன்றவையும் வினியோகிக்கப்படுகிறது.

ஓட்டல்களில் கிடைக்கின்ற உணவைவிட அறுசுவையுடன் தயாரித்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் உணவு சுவையாக இருப்பதால் இதனை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். குறித்த நேரத்தில் உணவு குடிசை பகுதிகளுக்கு வருவதால் பாராட்டும் குவிகிறது. அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் சாப்பிட்டு வந்த பலரும் தற்போது இந்த இலவச உணவை வாங்கி சாப்பிடுகிறார்கள்.

இது குறித்து மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் கூறியதாவது:- மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு கிடைக்க செய்வதே பிரதான நோக்கமாகும். அதனை மாநகராட்சி முன்னெடுத்து செய்து வருகிறது. சுகாதாரமான வகையில் உணவு தயாரிக்கப்படுகிறது. ஒருவருக்கு மூன்று வேளையும் தினமும் உணவு வழங்க ரூ.150 செலவாகிறது. இதற்கான உணவு பொருட்கள் டி.யு.சி.எஸ். கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து வாங்கப்படுகிறது. சமையல் கூடங்களில் இருந்து வேன் மூலம் உணவு கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. 13-ந் தேதி வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.