மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; உணவகங்கள் திறக்க அனுமதி

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள்... மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டிலேயே மிகமோசமாக கொரோனாவில் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு இதுவரை நோய் தொற்றுக்கு 4 லட்சத்து 651 பேர் ஆளாகியுள்ளனர். இதில் 2,39,755 பேர் குணமடைந்துள்ளனர்.

இருப்பினும் நேற்று மட்டும் புதிதாக 9,211 பேர் பாதிக்கப்பட்டனர், 298 பேர் உயிரிழந்தனர். இதில் மும்பையில் மட்டும் 60 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 14,463 ஆக அதிகரித்து உள்ளது. ஏறக்குறைய 1.46 லட்சம் பேர் கொரோனாவில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதால், கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளையும் அறிவித்து, ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதிவரை நீட்டித்து மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. மாநில தலைமைச் செயலாளர் சஞ்சய் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. 'மிஷன் பிகின் ஏகைன்' திட்டத்தின் தொடர்ச்சியாக, ஷாப்பிங் மால்கள், சந்தைகள், உணவகங்கள், ரெஸ்டாரன்ட்கள் போன்றவை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்படும். ஆனால், திரையரங்குகளைத் திறக்க அனுமதியில்லை.

அத்தியாவசியமற்ற விஷயங்களுக்காக மக்கள் வெளியே செல்ல அதாவது ஷாப்பிங் உள்ளிட்ட விஷயங்களுக்கு அவர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சுயசுத்தம் பராமரித்து, சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும். மருத்துவக் காரணங்களுக்காக, பணிக்காக, மருத்துவ சிகிச்சைக்காக மட்டும் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம் அதற்கு தடையில்லை.

மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும், மதவழிபாடு கூட்டம் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. திருமணம் போன்ற விஷேசங்களில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை, இறுதிச்சடங்கு போன்றவற்றில் 20 நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஷாப்பிங் மால்களில் இயங்கும் ஃபுட் கோர்ட், ரெஸ்டாரண்ட் போன்றவை செயல்பட அனுமதிக்கப்படும். வீட்டில் டெலிவரி செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திறந்த வெளியில் விளையாடப்படும் விளையாட்டுகளான கோல்ப், ஜிம்னாஸ்டிக், டென்னிஸ், பாட்மிண்டன் ஆகியவை சமூக விலகலுடன் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அனுமதிக்கப்படும். நீச்சல் குளம் திறக்க அனுமதிக்கப்படாது. சலூன், ஸ்பா, முடித்திருத்தகம், அழகு நிலையம் ஆகியவை கட்டுப்பாடுகளுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

அரசுப் பேருந்தில் மக்கள் பயணிக்கும் போது அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.