செக் குடியரசின் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா

அமைச்சர் ராஜினாமா... செக் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் ஆடம் வோஜ்டெக் பதவி விலகியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் புதிய உத்திகளைக் கையாள்வதற்கு வழிவகுக்கும் வகையில் தான் பதவி விலகுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். எனினும், புதிதாக சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை யார் ஏற்கப்போகிறார்கள் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செக் குடியரசில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும், அண்மைக் காலமாக அதன் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில், நாளொன்றுக்கான புதிய பாதிப்பு உச்சத்தை தொட்டது.

கடந்த வியாழக்கிழமை மட்டும் அதுவரை இல்லாத வகையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அமைச்சர் ஆடம் வோஜ்டெக் பதவி விலக வேண்டும் என்று அவை வலியுறுத்தின. இந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக வோஜ்டெக் அறிவித்துள்ளார்.