சீனா துறைமுகத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க கோரிக்கை

உதவி கோரியுள்ளனர்... மும்பையைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த இந்திய வணிகக் கப்பல் ஜாக் ஆனந்த், கடந்த ஜூன் முதல் சீனாவின் வடக்கு ஜிங்டாங்க் துறைமுகத்தில் சிக்கியுள்ள நிலையில், கப்பலில் பணிபுரியும் உறுப்பினர்கள் வீடு திரும்புவதற்கு உதவி கோரியுள்ளனர்.

23 இந்திய குழு உறுப்பினர்கள் கப்பலில் சிக்கி மிக மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. பல குழு உறுப்பினர்கள் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு நாளிலும் மருந்துகள் குறைந்து வருகின்றன.

கப்பலின் குழுவினர், பிரபல இந்திய ஊடகத்திடம் தொடர்பு கொண்டு, பெயர் வெளியிடாமல் அவர்களின் தற்போதைய நிலைமை பற்றிய சுருக்கமான விவரத்தை அளித்தனர்.

“நாங்கள் ஜனவரி மாதம் கப்பலில் ஏறினோம். தற்போது, சுமார் 1.70 லட்சம் டன் ஆஸ்திரேலிய நிலக்கரி கப்பலில் உள்ளது. இந்த கப்பல் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது. மே மாதத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு ஜூன் 13’க்குள் சீனாவின் ஜிங்டாங் துறைமுகத்திற்கு வந்தோம்.

ஐந்து மாதங்கள் நாங்கள் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் சீன துறைமுகத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறோம்.” என்று ஜாக் ஆனந்த் கப்பலைச் சேர்ந்த ஒரு குழு உறுப்பினர் தொலைபேசியில் கூறினார்.

“நாங்கள் 23 இந்தியர்கள் உள்ளோம் மற்றும் மிகவும் விரும்பத்தகாத சூழ்நிலையில் வாழ்கிறோம். நாங்கள் எங்கள் தாய்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறோம். சீன துறைமுக நிர்வாகம் எங்கள் சரக்குகளை இங்கே இறக்க அனுமதிக்கவில்லை. அவர்கள் இதற்கு எந்தவொரு காரணத்தையும் கூறவில்லை.

நாங்கள் எங்கள் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தோம். நிலைமை பற்றி அவர்கள் இராஜதந்திர சேனல்கள் மூலம் தகவல்தொடர்பு அமைக்க முயற்சிக்கின்றனர்.” என்று அவர் மேலும் கூறினார். ஜாக் ஆனந்த் வணிகக் கப்பல் மும்பையைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் லிமிடெட் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி இந்த விஷயத்தை சீனப் பிரதிநிதிக்கு எடுத்துச் செல்லுமாறு கப்பல்துறையின் இயக்குநர் ஜெனரல் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார்.

“இந்த விஷயத்தை விரைவாக தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நிறுவனம் செய்து வருகிறது. நாங்கள் இந்த விஷயத்தை கப்பல் போக்குவரத்து மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியோரிடமும் எழுப்பியுள்ளோம்.” என்று கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

சீன நிலக்கரி மீதான இறக்குமதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை சீன அரசாங்கம் மாற்றியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய நிலக்கரியை இறக்குமாறு சீன துறைமுகத்தில் சுமார் 20 கப்பல்கள் இதேபோல் செய்வதறியாமல் நிற்பதாகக் கூறப்படுகிறது.