சுஷாந்த்சிங் இல்லாமல் தோனி 2 படத்தை உருவாக்க முடியாது - இணை தயாரிப்பாளர்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மறைவால் ’தோனி 2’ படம் குறித்த அறிவிப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியானது. இந்தப்படத்தில் சுஷாந்த்சிங் வெகு அருமையாக நடித்திருப்பார். இந்த படத்திற்காக அவர் மிக அதிகமாக கடின உழைப்பை செய்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் கிரன்மோரே அவர்களிடம் தோனியை போல் விக்கெட் கீப்பிங் செய்வதற்கும் பேட்டிங் செய்வதற்கும் பயிற்சி எடுத்த சுஷாந்த்சிங், அடிக்கடி தோனியை சந்தித்து அவருடைய மேனரிசத்தை தெரிந்து கொள்ள முயற்சித்தார்.

மேலும் இந்தப் படம் தனது வாழ்க்கையில் மிக முக்கிய படம் என்பதை உணர்ந்திருந்த சுஷாந்த்சிங் அந்த படத்திற்காக தனது அதிகபட்ச உழைப்பை கொட்டினார்.

இந்த நிலையில் தோனி படத்தின் இணை தயாரிப்பாளரும் தோனிக்கு நெருங்கிய நண்பருமான அருண் பாண்டே என்பவர் கூறியபோது தோனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்த முயற்சி எடுத்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த முயற்சியை கைவிடுவதாக தெரிவித்துள்ளார்.

சுஷாந்த்சிங் இல்லாமல் ’தோனி 2’ படத்தை உருவாக்கவே முடியாது என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாக கூறிய அருண்பாண்டே, சுஷாந்த்சிங் உயிருடன் இருந்து ’தோனி 2’ திரைப்படம் உருவானால் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப் படம் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும் என்றும், அந்த பாக்கியம் இனி இல்லை என்றும் கூறியுள்ளார்.