பாஜ தலைவரை திமுக எம்.பி.க்கள் ரகசியமாக சந்தித்தனரா?

டில்லி பா.ஜ., வட்டாரங்களில் தமிழகம் தொடர்பான ஒரு விவகாரம் பரபரப்பாக அலசப்படுகிறது. தி.மு.க., எம்.பி.,க்கள் இருவர், மூத்த பா.ஜ., தலைவரை சந்தித்துள்ளனராம். இந்த சந்திப்பு, இரு முறை நடந்ததாக சொல்லப்படுகிறது.

தமிழக அரசியல் குறித்து, இந்த சந்திப்பில் பேசப்பட்டதாம். இவர்களில், ஒரு எம்.பி., தான் நடத்தி வரும் தொழில் தொடர்பாகவும், அந்த பா.ஜ., தலைவருடன் ஆலோசனை நடத்தினாராம். இந்த திடீர் சந்திப்பு, டில்லி அரசியல் வட்டாரங்களை பரபரப்பாக்கியுள்ளது. இந்த இரண்டு எம்.பி.,க்களில் ஒருவர், ஒரு முக்கிய துறையை கவனிக்கும் அமைச்சரையும் சந்தித்துள்ளாராம்.

சமீபத்தில் தமிழக பா.ஜ., தலைவர் முருகனை சந்தித்த துரைசாமியை கட்சியிலிருந்து நீக்கினார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின். உடனே, பா.ஜ.,வில் சேர்ந்து விட்டார் துரைசாமி. அதே போல எம்.பி.,க்கள் மீதும் நடவடிக்கை பாயுமா என அலசப்பட்டு வருகிறது. 'எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், ஆளும் கட்சி தலைவர்களையும், மத்திய அமைச்சர்களையும் சந்திப்பது, டில்லியில் சகஜம்.

தொகுதி தொடர்பான விஷயங்கள், தமிழகத்தில் புதிய திட்டங்களை நிறைவேற்றுவது உட்பட ஏதாவது விஷயம் இருக்கலாம். எனவே, இந்த சந்திப்பை பெரிதுபடுத்தக் கூடாது என, ஒரு தரப்பில் சொல்கின்றனர். 'தொகுதி குறித்த சந்திப்பு என்றால், வெளிப்படையாக இருக்க வேண்டியது தானே; எதற்கு ரகசியம்' என கிண்டல் அடிக்கும் பா.ஜ.,வினர், அந்த இரண்டு எம்.பி.,க்களும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் என்றும் கொளுத்திப் போடுகின்றனர்.