கொரோனா வார்டில் இருந்து காணாமல் போன இளம்பெண் கண்டுபிடிப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பிரசவத்திற்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று உறுதியானது. மேலும் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சுகப்பிரசவமாக குழந்தையும் பிறந்தது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தாயும், மகளும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டனர். அங்கு 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்ற அந்த பெண் நேற்று முன்தினம் இரவு திடீரென்று காணாமல் போனார்.

இதனால் அவரை ஆஸ்பத்திரி ஊழியர்களும், சுகாதார அதிகாரிகளும் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அரசு ஆஸ்பத்திரியில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, உடனடியாக நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சரவணன் அந்த பெண் நோயாளியை பிடிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நெல்லையில் இருந்து வள்ளியூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது அந்த பெண் நாங்குநேரியை கடந்து வள்ளியூருக்கு நடந்து சென்றது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அந்த பெண்ணை பிடித்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். காணாமல் போனதில் இருந்து 26 மணி நேரத்திற்குள் அந்த பெண்ணை போலீசார் பிடித்து அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.