வந்த வேகத்திலேயே டைவ் அடித்தார்... அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்.,

சென்னை: எடப்பாடிதான் சரியானவர்... அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமியே சரியானவர் என்றும் கோரிக்கைகளை வைக்க, அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக அதிமுக தலைமை அலுவலகம், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வீடுகள் பரபரப்பாக இருக்கின்றன. பொதுக்குழு கூட்டம் இன்னும் நடக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை. அதிமுகவின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெரும்பாலானோர் தங்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் ஒற்றைத் தலைமையை நிராகரிக்கும் ஓ.பன்னீர்செல்வம், கலவரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவருக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் இந்தக் கருத்தை வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால், ஓபிஎஸ் குழுவின் கோரிக்கையை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழு கட்டாயம் நடைபெறும் என அறிவித்து அதற்கான பணிகளில் களமிறங்கியுள்ளது.

மேலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் தங்கள் பக்கம் இழுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. 15 மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 8 ஆக குறைந்துள்ளது.
இதில், ஓபிஎஸ்ஸூக்கே ஷாக்கான விஷயம் என்னவென்றால், மாஃபா பாண்டியராஜனின் அணி தாவல் தான். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியபோது கூட இருந்தவர்களில், ஒருவர் கூட இப்போது அவருக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென தன்னுடைய ஆதரவை தெரிவித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்று எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த அவர், காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. இப்போது, ஒபிஎஸ் அணியின் பலம் வெகுவாக குறைந்திருப்பதால், அடுத்து என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை அதிமுகவினரும் அரசியல் நோக்கர்களும் எதிர்நோக்கியுள்ளனர்.