சென்னையில் தொடர் மழை ... குளிர்ந்த காற்று வீசுவதால் காய்ச்சல் பரவும் வாய்ப்பு அதிகம்

சென்னை: காய்ச்சல் பரவும் வாய்ப்பு அதிகம் ..... சென்னையில் மழை பெய்யும் போதெல்லாம் கூடவே நோய் பரவலும் அதிகரித்து விடும். இதை கருத்தில் கொண்டு தற்போது வடகிழக்கு பருவமழை கடும் சீற்றத்துடன் பெய்ய தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவ துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

சென்னையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் இன்னமும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. தற்போது மழைக்காலத்தில் இந்த வைரஸ் பரவல் அதிகரிக்கும் சூழல் இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இருமல், சளி இருப்பவர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இதையடுத்து இந்த தொடர் மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசுவதால் காய்ச்சல் பரவவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் மழைக்காலத்தில் பொதுவாக இதய நோய் பிரச்சினை இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பார்கள். அது போக குழந்தைகளை வைத்திருப்பவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும் என டாக்டர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர். பருவமழைக்கு ஏற்ப சென்னை மருத்துவமனையில் தேவைக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் கையிருப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்து உள்ளார்.