டெல்லியில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

சென்னை: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் பாலி தீவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் ஜி -20 நாடுகளின் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கிறது.

எனவே இதை முன்னிட்டு ஜி- 20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு ஜி- 20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும் மாநில முதல்வர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இதனை அடுத்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு நாடு முழுவதும் 32 பிரிவுகளில் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. சென்னையில் ஜி 20 கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார்.