சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை ...எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் முடிவெடுத்தனர்.

இதனையடுத்து இது தொடர்பான தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்மொழிந்தார். அதை ஏற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 100-க்கு 100 சதவீதம் ஏகமனதாக அந்த தீர்மானத்தை நிறைவேற்றினர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2024 மக்களவை தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை. எந்த வித பிரச்னை வந்தாலும் சமாளிக்க தயார்.

மேலும் சிறுபான்மை மக்களை சந்தித்து கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும். மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துவிடும் என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தால், கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துச் சொல்லுங்கள். கூட்டணி முறிவு குறித்து மக்களுக்கு சந்தேகம் இருந்தால் கட்சி கருத்துகளை உறுதியாக எடுத்துச் செல்லுங்கள்” என அவர் அறிவுறுத்தி உள்ளார்.