உழைப்பும், விசுவாசமும் இருந்ததால் அதிமுகவில் நான் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன் .. எடப்பாடி பழனிசாமி

சென்னை: டிவிட்டர் ஸ்பேஸில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். நான் ஒரு விவசாயி. எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன். கிளை கழக செயலாளராக அரசியல் பயணத்தை தொடங்கினேன்.அதன் பின்னர் ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் மாநில அளவில் பொறுப்பை வகித்தவன். படிப்படியாக உயர்ந்து இன்று தொண்டர்களால் பொதுச்செயலளாராக உயர்ந்திருக்கின்றேன்.

இதனை அடுத்து உழைப்பும், விசுவாசமும் இருந்ததால் அதிமுகவில் பதவிகள் கிடைக்கும். உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். விசுவாசமாக இருந்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம். இது இரண்டும், இறைவன் அருளாலும் இன்று நான் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிருக்கிறேன். இளைஞர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்.


மேலும் அண்ணா காலத்திலேயே இளைஞர்கள் அரசியலில் ஈர்க்கப்பட்டனர். எம்ஜிஆர் திரைப்படத்தின் மூலம் சில நல்ல கருத்துகளை கூறி இளைஞர்களை ஈர்த்தார். ஜெயலலிதா இலவச சைக்கிள், சீருடை என பல திட்டங்களை வகுத்து இளைஞர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தினார். ஜெயலலிதா மிகவும் கண்டிப்பானவர்கள். கொடுக்கின்ற வேலையை செய்யவில்லை என்றால் கோபம் வரும். அத்தகைய தலைவர்களிடம் நாங்கள் பணியாற்றியுள்ளோம்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை எனக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது குடிமராமத்து திட்டத்தை கொண்டுவந்தோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் பல பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட்டன. எனவே இதன் காரணமாக இளைஞர்கள் கல்வி பயில்கின்றனர். எனவே படித்த இளைஞர்கள் அரசியலுக்குவந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்” என அவர் பேசினார்.