ரூ.9 ஆயிரம் கோடியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படுவதாக எடியூரப்பா அறிவிப்பு

முதல்-மந்திரி எடியூரப்பா பதவி ஏற்று ஓராண்டு ஆகிறது. இதனையொட்டி சாதனை விளக்க கையேடு வெளியீட்டு விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு சாதனை கையேட்டை வெளியிட்டார்.

அப்போது பேசிய எடியூரப்பா, நான் கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்று ஒரு ஆண்டு ஆகிறது. நான் பதவி ஏற்றபோது மாநிலத்தில் வறட்சி இருந்தது. அதன் பிறகு சில நாட்களில் அதிகளவில் மழை பெய்து அணைகள் நிரம்பி வழிந்தன. குறிப்பாக வட கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். தேவையான உதவிகளை செய்து கொடுத்தேன்.முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றதாக நிகழ்ச்சியில் எடியூரப்பா தெரிவித்தார்.

மேலும் அவர், கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ரூ.9 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிராமப்புற சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு ரூ.4,700 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மாநில மக்களுக்கு நன்றிக்கடனை தீர்க்க வேண்டியுள்ளது. அதனால் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளதாக அவர் கூறினார்.