போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த மகாராஷ்டிராவை சேர்ந்த 8 பேர் சிக்கினர் - குமரியில் பரபரப்பு

கன்யாகுமரிக்கு மகாராஷ்டிர மாநிலம், சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களை களியக்காவிளை மற்றும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பின்னர் பரிசோதனை முடிவு தெரியும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து குமரிக்குள் நுழைந்த 8 பேரால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தன்னுடைய மனைவி, 15 வயது மகள், 14 வயது மகன் மற்றும் 4 நபர் என மொத்தம் 8 பேருடன் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.

தொடர்ந்து அவர்கள் ஒரு கார் மூலம் காக்கவிளை வழியாக நேற்றுமுன்தினம் குமரிக்குள் நுழைந்து சொந்த ஊருக்கு சென்றனர். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு வீட்டில் இருந்துள்ளனர். இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே தெரிய வந்தது. உடனே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தூத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் நேற்று மதியம் 2 ஆம்புலன்சுகளுடன் கலிங்கராஜபுரம் கிராமத்திற்கு வந்தடைந்தனர்.

பின்னர், 8 பேரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வருமாறு அழைத்துள்ளனர். அப்போது, உறவினர் பெண் ஒருவர், அவர்கள் எங்கும் வரமாட்டார்கள் என சுகாதாரத்துறை அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் விரைந்து வந்து, 8 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.