ஒடிசாவில் ரயில் மோதி யானை பலியானது

யானை மீது ரயில் மோதியதால் தடம் புரண்டது... ஒடிசா மாநிலத்தில் யானை மீது ரயில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஒடிசா மாநிலம் ஹதிபரி - மானேஸ்வர் ரயில் நிலையங்களுக்கு இடையே புரி-சூரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தபோது குறுக்கே வந்த யானை மீது ரயில் மோதியது. இதில் யானை உயிரிழந்தது. இன்று அதிகாலை 2.04 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ரயிலில் இருந்தவர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

யானை மீது ரயில் மோதியதில் என்ஜின் முன்பகுதியின் சக்கரங்கள் தடம் புரண்டதால் அவ்விடத்தில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. சம்பல்பூரில் உள்ள ரயில்வே மேலாளர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து ரயிலை சரிசெய்த பின்னர் போக்குவரத்து சீரானது.

யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பல்பூர் வனத்துறை அதிகாரி சஞ்ஜீத் குமார் இதுகுறித்து, 'பொதுவாகவே இந்த இடத்தில் யானைகள் நடமாட்டம் இருக்கும் என்று ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் பரிந்துரைக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் ரயில் சென்றுள்ளது. யானை நடமாடும் பகுதிகளைக் குறிப்பிடும் அடையாள பலகைகளும் ரயில் பாதையின் அருகே வைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் 28 யானைகள் இப்பகுதியில் உயிரிழந்துள்ளன.