நிலம் தந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு... சசிகலா வலியுறுத்தல்

சென்னை: என்.எல்.சி நிறுவனத்தை உருவாக்குவதற்கு அப்பகுதி மக்கள் தங்கள் நிலங்களை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி என்பது அந்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பது தான். ஆனால் அப்படியான உறுதிமொழியை என்.எல்.சி நிர்வாகம் தொடர்ந்து மீறி வருகிறது. அவர்களை ஒதுக்கக்கூடாது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் தங்களுடைய தனித்துவமான திறமைகளால் எண்ணற்ற துறைகளில் சாதனை படைத்து இன்றைக்கும் நிரூபித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

எனவே, என்.எல்.சி நிறுவனம் தமிழகத்தை புறக்கணிப்பது என்பது இம்மண்ணின் இளம் தலைமுறையினருக்கு இழைக்கப்படும் அநீதியாகத்தான் கருதப்படும்.

தமிழகத்தின் அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு செயல்படுகின்ற இந்த நிறுவனமானது, இங்குள்ள தமிழக மக்களுக்கு, அதிலும் குறிப்பாக இந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கும், அதனை விரிவாக்கம் செய்வதற்கும் தங்களுடைய நிலங்களை வழங்கியுள்ள குடும்பத்தினருக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்.

எனவே திமுக அரசு, தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாத்திடும் வகையில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, மத்திய அரசும் இதில் உடனடியாக தலையிட்டு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு சசிகலா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.